என் அன்பு நண்ப !

நட்பை வளர்க்க
வார்த்தைகள் தேவையில்லை.
புன்னகை மட்டும் போதுமென்று
புரிய வைத்த
என் அன்பு நண்ப !

என் இதயப் பாலைவனத்தில்
நீரூற்றிப் பூமரம் நட்டவனே
வெறும் பனி மூட்டமாய் இருந்த
என் இதயத்தில்
மேக மூட்டம் தோன்றிப்
பெருமழை பொழியக் காரணமானவனே

கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும்
பட்டுப் பூச்சியாய்
கூட்டம் கூடிப் பறந்து திரியும்
பட்டாம் பூச்சியாய்
எத்தனை பரவசங்கள் நமக்குள்
நடந்தேறின.

என் ஆருயிர் நண்ப !

சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட
பனித்துளியாய்
என் அன்புக்குள் உளங்கிக் கொள்ளும்
முத்தானாய் நீ

அந்தரத்தில் பறப்பது போல்
ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த
என் வாலிப நண்பனே !

பனித்துளி தெளித்த ரோஜாவாய்
முள்முடி தரித்த எண்ணத்தில்
ஆர்ப்பரித்திருந்த நான்
உன் உறவின் நெருக்கத்தை
இழந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

என் அன்பு நண்ப !

நட்புக்கு இலக்கணமான
உன்னையும் உன் செயலையும்
எப்போதும் மறக்க
என் மனம் ஒப்பாது.

என் இதயப் பாலைவனத்தில்
நீரூற்றிப் பூமரம் நட்டவனே.
‘பிரிவு’ என்ற ஒற்றை வார்த்தையால்
‘நட்பு’க்கு முற்றுப்புள்ளி வேண்டாம்.

காலம் கடந்தும் எல்லை கடந்தும்
எல்லாம் கடந்தும்
என்றும் வாழும்
இனிய தொடக்கமாம் - நட்பினை
வலிமைப் படுத்த - இன்னும்
வாழ்ந்து காட்டுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)