சுதன் லண்டனில் இருந்து வந்து முன்று நாளாகியிருந்தது. ஏழு வருட லண்டன் வாழ்க்கை அவனை எவ்வளவோ மாற்றியிருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் தனது நண்பர்களைச் சந்தித்த சந்தோஷத்தில் அவர்களுடன் பீச்சு பார்க் என்று எல்லா இடமும் சுற்றினான். வகைவகையான வெளிநாட்டு உணவுகள், குளிர்பானங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினான். வீடு திரும்பும்போது மணி இரவு பத்தைத் தாண்டியிருந்தது. அவனின் வரவுக்காக தாய் விழித்திருந்தாள். “அம்மா பசிக்குது” “………………..” “அம்மா பசிக்குது சோறு இருக்கா…? ” “இரப்பு வாறன்” என்றபடி தாய் அடுப்படிக்கு ஓடினாள். இருந்த சோறு கறி எல்லாம் போட்டு குழைத்து திரணையாக்கி ஒரு உருண்டையாக கையில் கொடுத்தாள் தாய். “ ஆ… என்ன அருமை இப்பிடி ஒரு சாப்பாடு சாப்பிட்டு ஏழு வருஷமாச்சு… இப்பதான் சாப்பிட்டமாதிரி திருப்தியாக இருக்கு…” என்றான். அவனை லண்டன் வாழ்க்கை எவ்வளவோ மாற்றியிருந்தாலும் ஒரு தாயாக அவனிடம் எந்த மாற்றத்தையும் காணாது வியந்து நின்றாள்.