நாடோடி நான்...



இன்று
 எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர்.

இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" .

எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர். நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம். அத்தனை உலக அரசியல் அறிவு படைத்தவர் அவர்.

மூன்றாமவர் ஒரு பெண் இவள் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவள். நல்ல அழகான தோற்றம் உடையவள் போன வருடம் வரைக்கும் தனக்கு இரண்டு பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டிருந்தவள் திடீரென ஒருநாள் தனக்கு ஐந்து பிள்ளைகள் என்றாள். எமக்கு எதுவும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது முதல் கணவனை அவள் விவாகரத்து செய்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் கூடிய மற்றொருவரை அவள் மணம் முடித்திருப்பதாக...

கடைசியாக நான். என்னைப்பற்றிச் சொல்ல அவ்வளவாக ஒன்றும் இல்லை. அவர்கள் மூவருள்ளும் இளையவன் நான்...

மற்றைய மூவருக்கும் தமக்கென மொழி , மதம், நாடு உள்ளது... எனக்கு மொழியுண்டு... மதமுண்டு... நாடு மட்டும் இல்லை. அவர்கள் மூவருடன் ஒப்பிடும் பொது சுயத்தை இழந்தவனாக என்னை நான் உணர்ந்தேன்...

எங்கள் நண்பரை வழியனுப்புவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் பிரியாவிடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்தது. அதைவிட நாங்கள் ஒரு கேக்கை பிரத்தியேகமாக அவருக்கென வாங்கி வந்திருந்தோம். அதனை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவருடனான கடைசி ஓய்வறைச் சந்திப்பைத் தொடர்ந்தோம்...

அழகுராணிப் போட்டியில் தொடக்கி அரசியல் வரை நீண்டது... அழகுராணிப் போட்டி பற்றிய பேச்சின் போது மெக்சிக்கோ நண்பரின் பக்கம் கூடுதலான தகவல்கள் இருந்தது. பெண்கள் பற்றிய அவருடைய வர்ணிப்பும் பேச்சும் அவரை மெக்சிக்கன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தியது....  அரசியல் பற்றிய பேச்சின்போது மனிதர் அப்படியே அடங்கி விடுவார்...

இப்போது இது எதித்திரிய நாட்டவரின் நேரம் போல அவர் பேசத் தொடங்குவார். தங்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் தாங்கள் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றது பற்றியும் கதைகதையாகச் சொல்வார்.

1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனமை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் திருப்பம் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. இடையிடையே எமது ஈழப் போராட்டத்துக்கும் வந்து போவார். உங்கள் போராட்டம் அநியாயமாகத் தோற்று விட்டது எனக் கூறிக் கவலைப்படுவார்.

தாங்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய போது நாட்டின் கடைசிக் குடிமகன் கூடப் போராடியதாக வியட்னாம்காரி சொன்னாள்.

தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப் படமே தங்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தந்ததாக அவள் பெருமைப் படுவாள். ஒரு சிறுமி உடலில் எந்த உடையுமின்றி தெருவில் அம்மணமாக ஓடுவதாகவும் சில படை வீரர்கள் அவளைத் துரத்துவதாகவும் அமைந்த அந்தப் புகைப்படம் பற்றிய விவரணத்தை அவள் விவரிப்பாள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் எங்களுக்கு விடிவு வரவில்லையே எட்டுக் கோடி மக்கள் கொண்ட எமக்கென உலகில் நாடொன்று இல்லையே என நான் அவரிடம் சொல்வேன்...

எங்களுக்கான விடுதலைப் போரில் எண்ணற்ற குழந்தைகள் கர்ப்பிணிகள் என லச்சக் கணக்கில்  எங்கள் மக்கள் கொல்லப்பட்ட கதைகளைச் சொல்வேன்...

கடைசிக் கட்டப் போரின்போது மகன் முன் தாய்...  தாய் முன் மகன்... மகள் முன் தந்தை... தந்தை முன் மகள்... என அனைவரும் நிர்வாணப் படுத்தப்பட்டு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்ட துன்பியல் வரலாற்றை எடுத்துச் சொல்வேன்... இப்படியெல்லாமா நடக்கும் என்பதுபோல் அவர்கள் என்னையே பார்ப்பார்கள்... ஆனால்.........

முடிவில் அவர்களிடம்  ஒன்றை மட்டும்  சொல்வேன்

"உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால்  நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.



கருத்துகள்

  1. "உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.


    சரியாகச் சொல்லியிருக்கீங்க.... விரைவில் அந்த நாள் வரும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)