வந்த காலம் இது வசந்த காலம்
சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் - நம்மூர்
கத்திரி வெயில் தான்
பட்டென மனதில் தோன்றி மறைகிறது
இது இப்போது இனிய வசந்த காலம்
புல்வெளி மூடிய பனிப்புயல் போய்
புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்
கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து
வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்
பனிப்பொழிவும் இனியில்லை
கடுங்குளிரும் இங்கில்லை
பார்க்கும் இடமெங்கும் பச்சை மயம்
பசுந்தரையில் படுத்திடலாம்
சோலையென வீடுதனைப்
புதுப் பொலிவு பண்ணிடலாம்
நதிகள் ஏரியென - இனி
விடுமுறைக்குச் சுற்றிடுவர்
முற்றும் மூடி முன்னர்
வீதியிலே போனவர்கள்
வெட்டவெளி மணலில்
வெற்றுடலாய் ஓய்வெடுப்பர்
பச்சை குத்தி நன்கு
பளிச்சென்று உடல் தெரிய
கச்சை போல் உடையைக்
கவசமாய் அணிந்து நிற்பர்
பச்சைப் பசேலென்று - இலை
துளிர்ப்பதர்க்கு முன்னாலே
முந்திவிடும் மொட்டுகள்
மனிதர்கள் போலிங்கே
மரங்களுக்கும் அவசரம்
இலை துளிர்க்கும் முன்பே பூப்பூக்கும்
பட்டென்று காய்த்துப் பழுத்துவிழும்
மான் துள்ளும்
முயல் கொஞ்சும்
அணிலினங்கள் சல்லாபிக்கும்
காக்கை கூடு கட்டும்
குருவிகள் குதுகலிக்கும்
பூக்கள் கூட மகரந்தம் சொரிந்து
தம்மினம் பெருக்கும்
காற்றும் இனித் தென்றலாய் வீசும்
கவிதைபாடப் புறக் காட்சிகள் கிடைக்கும்
நேற்றுப்போல் இனியில்லை
பனிக்காலம் அது பழைய காலம்
வந்த காலம் இது வசந்த காலம்
ஊரோடு ஒத்து நன்றாக வாழ்ந்திடுவோம்
வசந்தத்தை நாமும் வரவேற்புப் பண்ணிடுவோம்
-தியா -
என்னவொரு வர்ணனையுடன் கூடிய ரசனை...! அருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி... :)
பதிலளிநீக்கு