மேய்ப்பனை இழந்த மந்தைகள்

meippanai_izhantha_620x443காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.
எங்கள் மண்ணில் நாங்கள்
தலை நிமிர்ந்து நடக்கும் உரிமை மறுக்கப்பட்டது
கனவான்களாகவும் கடவுளர்களாகவும்
எங்களில் தங்களைத் திணித்தபடி
எங்கள்மேல் தங்கள் வன்மங்களை
கொட்டித் தீர்க்க முடிவெடுத்த பின்னர்
மீட்பர்கள் என்று தம்மைத் தாமே அழைத்தபடி
எம்மைச் சூழ்ந்து கொண்டனர்.
காலம் கடந்த பிறிதொரு நாளில்
மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்லவர்கள்
மீண்டும் நாவாய்கள் ஓட்டி
புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர்.
நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில்
பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர்.
வன்மங்கள் கொட்டி மீளமுடியாத ரணங்களை
மட்டுமே தரமுடிந்த அவர்களால்
சிதளூரும் காயங்கள் மட்டுமே நிலைபெற்றன.
புண்ணாகிப் போன நெஞ்சுகள்
கனம் தாங்காமல் வெந்து வதங்கின.
அன்று – போரின் கனத்த குரலுக்கு மத்தியிலும்
ஒரு பெரு வாழ்வு இருந்தது
அனேகமாக எல்லாரும் போனபின்னர்
எல்லாமே கனவாகிப் போனது.
இரைச்சல் மட்டுமே மீதமாகிய இன்றைய வாழ்வில்
முடிந்தவரை குனிந்த தலை நிமிராமலேயே
வாழ்க்கை நகர்கிறது.
குரூரத்தால் மட்டுமே நிரப்பப்பட்ட மிருகங்களிடையே
எங்கள் வாழ்வனைத்தையும் இழந்தோம்
சிதைந்து போன கிராமங்கள் நடுவில்
மனிதர்களைத் தேடி அலைகையில்
மனிதர்கள் மீண்டும் கூடிவிடக் கூடாது என்பதற்காகவே
நிறுத்தப்பட்டவர்களின் கூரிய ஈட்டிகள்
குடல் வரை பாய்கிறது.
ஆசிர்வதிக்கப்பட்ட மரணத்தை விதைத்தபின்
வெற்றுடலில் தன் வன்மத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.
இந்தக் கவிதை எழுதப்படுகின்ற போதே
என் இனத்தில் ஒருவன் காணாமல் போகலாம்
என் இனத்தில் ஒருத்தி கற்பழிக்கப்படலாம்
என் இனக் குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப் படலாம்
இன்னும் என்னென்னெமோ நிகழலாம்
எதுவும் இங்கே சாத்தியம் என்ற பிறகு
பின் எது நடந்தால்தான் என்ன?

கருத்துகள்

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)