அழகிய ஐரோப்பா - 5
படகுச் சவாரி
இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது.
காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன்.
மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் ரெண்டு மூன்று நிமிடம் ரசித்துவிட்டு அதன் பின் ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தேன்.
மதியம் தாண்டிய போது மழை ஓய்ந்து வெண்முகில் நடுவே வெயில் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
மாலைப் பொழுதில் எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன போது
“ப்ளூ வாட்டர்” என்ற இடம் அருகில் இருப்பதாகவும் இருபது நிமிச பஸ் பயண தூரம் என்றும் சித்தப்பா சொன்ன போது அடுத்த நொடியே கிளம்பிவிட்டோம்.
பஸ் நல்ல விசாலமானதாகவும் சுத்தமானதாகவும் இருந்தது. சரியாக இருப்பது நிமிட பயணத்தில் ப்ளூ வாட்டரை வந்தடைந்து விட்டோம்.
மாலை நேரத்துத் தங்க நிற சூரிய ஒளியில் மூன்று பக்கம் மலைகளாலும் ஒரு புறம் நிலம் சூழ நடுவில் ஒரு சிறு நகரம் வடிவமைக்கப் பட்டிருந்தது.
கண்ணாடி இழைகளால் கட்டப்பட்ட பிரமாண்டமான ஷொப்பிங் சென்டரில் மாலைச் சூரியன் பட்டு தங்கத் தகடுகள் பதித்த மாளிகை போல் பிரமிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.
ஷொப்பிங் சென்டர் உள்ளே சென்றபோது மால் ஆப் அமெரிக்காவை ஞாபகப் படுத்துவது போல் இருந்தாலும் வெளியில் இருந்த பிரம்மாண்டம் உள்ளே இருக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான்.
ஷொப்பிங் முடிந்து வெளியே வந்த போது இளமான காற்று வீச அலைகளின் ஓசை ஒருவித இன்பத்தைத் தந்தது.
“படகுச் சவாரி போகலாமா” என்று என் மனைவியைக் கேட்டேன்
“அதுக்கென்ன போகலாமே” என்றாள் மறுப்பேதுமின்றி
“ஹய்யா” என என் பிள்ளைகள் துள்ளிக் குதித்தனர்.
எனக்கோ அல்லது என் மனைவிக்கோ முன்னெப்போதும் படகுச் சவாரி செய்து முன்னனுபவம் இல்லாததனால் கன்னிச் சவாரிக்காக வரிசையில் காத்திருந்து ரிக்கெட் எடுத்தோம்.
படகில் ஏறி எப்படி அமர்வது, எப்படி இயக்குவது என்பது தொடர்பாக ஒரு டெமோ காண்பித்தார்கள் அதன்படி பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொண்டு படகில் ஏறி இருந்தோம்.
முதன் முதலாக சுக்கானை பிடித்த போது கை ஒரு விதமாகப் பதற தொடங்கியது. ஓரிரு நிமிடங்களின் பின் ஒரு பரீட்சயமான படகோட்டிக்கு உரிய மிடுக்குடன் சுக்கானைப் பிடித்து ஓட்டத் தொடங்கினேன்.
இரு கரையிலும் ஏராளமான படகுகள் கட்டப்பட்டிருந்தன. எண்ணற்ற காட்சிகளை அனுபவித்துக் கொண்டே படகில் பயணமானோம்.
எங்களுக்குத் தரப்பட்ட நாற்பத்து ஐந்து நிமிடங்களில் எனது கேமராவுக்கு நிறைய தீனி கிடைத்துவிட்ட சந்தோசம் எனக்கு.
ஓடும் படகில் ஒவ்வொரு ஸ்பாட்டிலும் என் செல்ஃபி ஸ்டிக்கை நீட்டி சில காட்சிகளைப் படம் பிடித்தேன்.
செவ்வானம் கருஞ்சிவப்பு சூரியனை மெள்ள மெள்ள விழுங்கிக்கொண்டிருந்தது. தண்ணீர் முழுவதும் பச்சை நிற மின்னொளியில் பளபளவென மரகதமணிபோல் மின்னிக் கொண்டிருந்தது.
“இருளுது இனி வீட்டுக்குப் போகலாமா” என்றாள் என் மனைவி
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன… ஏன் அவரசம் என்ன அவசரம் பெண்ணே…” என்ற பாடலை முணுமுணுத்த படி நேரத்தைப் பார்த்தேன் எமக்குத் தரப்பட்ட நேரம் முடிவடைய இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தன. படகை ஓரமாக நிறுத்தி விட்டு மெதுவாக இறங்கி நடந்தோம்.
“படத்தைக் காட்டுங்கோ பார்ப்போம்…” என்றவாறு என் போனை பிடுங்கியவள் அருமையான சில காட்சிகள் தவறாக “க்ளிக்” செய்யப்பட்டு முழுவதுமாகக் கோணம் மாறியிருந்ததைக் கண்டு ஒருவித ஏளனமாக என்னைப் பார்த்தாள்.
எதுவும் பேசாமல் மறுபுறம் பார்த்தேன். என் நிலை கண்டு எனது மனைவிக்கும் சங்கடமாக இருந்ததை உணர்ந்தேன்.
எங்களை கூட்டிச் செல்வதற்கென மாமா கார் கொண்டு வந்திருந்தார். காரில் ஏறி அமர்ந்து கொண்டதும் ஏஸியை முடுக்கிவிட்டு நகர் நோக்கி விரைந்தார்.
பிரதான நுழைவு வாசலுக்கு முன்பாக ட்ராஃபிக் அதிகமாக இருப்பதால் போலீஸ்காரர்கள் பாதையை அடைத்திருந்தனர். காரை வெளியே எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டவராக குட்டிக்குட்டி கடைகள் இருந்த ஒரு தெருவில் வளைந்து ஒருவழிப்பாதை ஒன்றில் ஏறி மறுபடியும் நெடுஞ்சாலை ஒன்றில் இறக்கி ஒருவாறாக இரவு எட்டு மணிக்கு முன்னதாக வீடு வந்து சேர்ந்துவிட்டோம்.
பயணம் தொடரும்…
-தியா-
கருத்துகள்
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-