அப்பிள் பழமும் அம்முக் குட்டியும்
அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்த்தால் போதும் என்று நினைப்பான். யாழ்ப்பாண ரவுணுக்கு போறதெண்டால் அவனுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ அலுவல் இருக்குதெண்டு நினைக்கலாம். ரவுணுக்குப் போற போதெல்லாம் அவுஸ்ரேலியா அப்பிள்… அவுஸ்ரேலியா அப்பிள்… எண்டு கூவிக் கூவி விப்பாங்கள். “அது கூடாத பழம்… மெழுகு பூசித்தான் விப்பாங்கள்…நீ சாப்பிடக் கூடாது ராசா” என்றபடி தாயோ கொய்யாப்பழக் கடையின் முன்னே போ